ஆம்ஸ்டல்வீன்: உலக கோப்பை ஹாக்கியில் இந்திய அணி அர்ஜென்டினாவிடம் தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
பெல்ஜியத்தின் வேவ்ரே, நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் நகரங்களில், உலக கோப்பை ஹாக்கி 16வது சீசன் (ஆண்கள், பெண்கள் பிரிவு) நடக்கிறது. ஆண்களுக்கான முதல் சுற்றில் 'டி' பிரிவில் இடம் பெற்ற இந்தியா அணி, வேல்ஸ், பாகிஸ்தானை வீழ்த்தியது. இங்கிலாந்திடம் தோல்வியடைந்த இந்தியா, 2வது இடம் பிடித்தது.
அரையிறுதிக்கான இரண்டாவது சுற்றில் 'இ' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, நெதர்லாந்திடம் தோல்வியடைந்தது. நேற்று ஆம்ஸ்டல்வீனில் நடந்த 2வது போட்டியில் அர்ஜென்டினாவை எதிர்கொண்டது இந்தியா. இதில், அதிக கோல் வித்தியாசத்தில் (2 அல்லது அதற்கு மேல்) வென்றால் மட்டுமே அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் களமிறங்கியது இந்தியா.
ஆட்டத்தின் முதல் பாதியில் சிறப்பாக விளையாடிய அர்ஜென்டினா அணி 2-1 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினாவுக்கு அந்த அணி வீரர்கள் கோல்களை அடித்து முன்னணி அளித்தனர். தொடர்ந்து போராடிய இந்திய அணிக்கு சுக்ஜீத் சிங் (58 வது நிமிடம்), ஹர்திக் சிங் (60வது) தலா ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தனர். ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3-5 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. ஒரு போட்டியில் கூட வெற்றி பெற்றாத இந்திய அணி, 'இ' பிரிவில் 4வது இடம் பிடித்ததது. இதனால் கோப்பை கனவு தகர்ந்தது. வரும் ஆக. 28ல் நடக்கவுள்ள 7-8வது இடத்துக்கான போட்டியில் இந்திய அணி, பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது.