மதுரை, அக். 18: “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” என்ற உயரிய நோக்கில், உணவுப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனையை மதுரை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா தொடங்கி வைத்தார்.
அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு குடும்பங்களின் மாதாந்திர செலவினங்களில் கூடுதல் சுமையை ஏற்படுத்தி வரும் நிலையில், சாமானிய மக்களுக்கும் தரமான அரிசி குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் கூட்டுறவு மற்றும் அமுதம் அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படைத் தேவையான உணவு அனைவருக்கும் எளிதில் கிடைக்க வேண்டும் என்ற சமூக அக்கறையை வெளிப்படுத்தும் இந்த நடவடிக்கை, குடும்ப அட்டைதாரர்களுக்கு உதவியாக அமையும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மேற்கு வட்டம், முடக்குச்சாலையில் அமைந்துள்ள மதுரை மாவட்ட பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா அவர்கள் அரிசி விற்பனையைத் தொடங்கி வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசியை வழங்கினார்.
தொடர்ந்து, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ள சன்னரக அரிசியின் தரம் மற்றும் இருப்பு விவரங்களை நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார். பொதுமக்களுக்கு முறையாகவும் தரமாகவும் அரிசி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மக்களின் உணவுத் தேவைக்கு முக்கியத்துவம்!
விலைவாசி உயர்வால் பாதிக்கப்படும் ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் நியாயமான விலையில் கிடைப்பது மிக முக்கியமானதாகும். அந்த வகையில், கூட்டுறவு மற்றும் அமுதம் அங்காடிகள் வாயிலாக குறைந்த விலையில் சன்னரக அரிசி விற்பனையை முன்னெடுத்திருப்பது பொதுமக்களின் உணவுப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” என்ற தமிழர் பண்பாட்டின் உயரிய அறநெறியை நினைவூட்டும் வகையில், உணவின் அவசியத்தையும் சாமானிய மக்களின் நலனையும் மையமாகக் கொண்டு மதுரை மாவட்டத்தில் இந்த விற்பனையைத் தொடங்கி, அரிசியின் தரம் மற்றும் இருப்பையும் நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணாவின் நடவடிக்கை, அரசின் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் நிர்வாக முன்னெடுப்பாக அமைந்துள்ளது. இந்த நிகழ்வில் கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்கள் ஆசைத்தம்பி, குலசேகர பாண்டியன் மதுரை மேற்கு தாசில்தார் தான மூர்த்தி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.