புதுடில்லி: மாணவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ஒரு வலிமையான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட கல்வி முறையே ஒரு வலிமையான தேசத்தின் அடித்தளம் என்று நான் எப்போதும் நம்பி வந்துள்ளேன். ஜூலை 16 அன்று அறிவிக்கப்பட்ட நீட்-யுஜி (NEET-UG) தேர்வு முடிவுகள் திருப்திகரமாக இருந்தன. ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்த பல திறமையான மாணவர்கள் வெற்றி பெற்றனர். இருப்பினும், பொறுப்புள்ள பதவிகளில் இருந்த சில தனிநபர்கள், பல மாணவர்களைத் தவறாக வழிநடத்த முயன்றனர். இது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. நமது ஜனநாயகத்தின் சக்தியின் மீது எனக்கு எப்போதுமே அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. இளைஞர்களின் விருப்பங்கள், கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நான் ஆழ்ந்து மதிக்கிறேன். அவர்கள் இந்தியாவின் எதிர்காலம் மட்டுமல்ல, ஒரு புதிய; வளர்ச்சியடைந்த இந்தியாவின் சிற்பிகள்.
கடந்த 10 நாட்களில் நடந்த நிகழ்வுகளால் நான் வருத்தமடைகிறேன். இது எனக்கு தனிப்பட்ட கவுரவம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. இந்தியாவின் இளைஞர் சக்தியே இந்த நாட்டின் உண்மையான பலம். நாட்டின் இளைஞர்கள் மாயைகளின் தீய வட்டத்திற்குள் வீழ்வதை நான் அனுமதிக்க மாட்டேன், இதுவே எனது உறுதி. ஜந்தர் மந்தரிலும் நாடு முழுவதிலும் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை தேசவிரோத சக்திகள் தங்கள் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவதை நான் அனுமதிக்க மாட்டேன். நாட்டின் ஒற்றுமை பேணப்பட வேண்டும்.
இந்தியாவில் ஒரு மாணவரின் எதிர்காலம் கூட சட்டச் சிக்கல்களில் சிக்கக்கூடாது. நமது பிள்ளைகள் தங்கள் நேரத்தை படிப்பிற்கு அர்ப்பணித்து, தங்கள் தொழில் வாழ்க்கையை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். இதை மனதில் கொண்டு, எனது ராஜினாமாவை பிரதமருக்கு அனுப்பியுள்ளேன். தேசத்துக்கு சேவை செய்வதே என் வாழ்வின் தலையாய முன்னுரிமை. நான் எப்போதும் அதற்கே என்னை அர்ப்பணித்துக் கொள்வேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.