புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் என்ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணியில் புதிதாக அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ள பா.ஜ.க. அமைச்சரான காமராஜ்நகர் தொகுதி எம்.எல்.ஏ. ஜான்குமாருக்கு 6 மாதத்துக்கு மேலாகியும் இதுவரை இலாகா ஒதுக்கப்படவில்லை.

இந்நிலையில் தி.மு.க.வை சேர்ந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜானகிராமனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. புதுச்சேரி ஆம்பூர் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற விழாவில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்று, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜானகிராமன் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரசார் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது, பா.ஜ.க. அமைச்சர் ஜான்குமாரும் அங்கு வந்து படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடனே முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் ஜான்குமாரிடம், வாருங்கள் இலாகா இல்லாத அமைச்சரே நலமா?, முதல்வர் ரங்கசாமி எப்போது உங்களுக்கு இலாகா ஒதுக்குவார்? என சிரித்தபடியே கேள்வி எழுப்பினார்.