இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான சிம்லா உட்பட மாநிலத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களுக்கு மிதமான பனிப்பொழிவு முதல் கடும் பனிப்புயல் வரை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக சம்பா, காங்க்ரா, கின்னௌர், குலு, லாஹுல்-ஸ்பிதி, மண்டி, சிம்லா மற்றும் சிர்மௌர் ஆகிய பகுதிகளில் அடுத்த 6 மணி நேரத்திற்கு இடைவிடாத பனிப்பொழிவு இருக்கும் என்றும், சில இடங்களில் தீவிரமான பனிப்புயல் வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல், ஊனா, பிலாஸ்பூர் மற்றும் ஹமீர்பூர் ஆகிய மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்யக்கூடும். இந்தப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன், இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. காங்க்ரா, சோலன் மற்றும் சிர்மௌர் மாவட்டங்களிலும் மழை மற்றும் பனிப்பொழிவு தீவிரமாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.