நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் வதோதராவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. தொடர்ந்து ராஜ்கோட்டில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.
இதனால் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இந்நிலையில் ஒருநாள் போட்டித் தொடரை வெல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் வகையில் அமைந்துள்ள கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று (18-ம் தேதி) நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இரு அணி வீரர்களும் இந்தூர் வந்தடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து நியூஸிலாந்து அணி வீரர்கள் ஹோல்கர் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி தனது பந்துவீச்சு வியூகங்களை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கடைசி போட்டி நடைபெறும் இந்தூர் ஹோல்கர் மைதானத்தின் எல்லைக்கோடுகள் சிறியவை. மேலும் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். இதனால் இந்திய அணி பந்துவீச்சு திட்டங்களில் சில மாறுதல்களை மேற்கொள்ளக்கூடும். பந்துகளின் நீளத்தை கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும். சுழற்பந்து வீச்சை பலப்படுத்தும் வகையில் நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக ஆயுஷ் பதோனி அறிமுக வீரராக களமிறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.