இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்திய பாரம்பரிய உடையில் பிரதமர் மோடியை வரவேற்றுள்ளார்.

இஸ்ரேல் நாட்டுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் சென்றார். அந்நாட்டின் பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் மாலை உரையாற்றிய பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய பதக்கம் அளித்து கெளரவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிரதமர் நெதன்யாகு தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

அப்போது மோடியை வரவேற்க இந்திய பாரம்பரிய உடை அணிந்து வந்த பெஞ்சமின் நெதன்யாகுவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மோடியை வரவேற்கும் காணொலியை டுவிட்டர் தளத்தில் பகிர்ந்துள்ள நெதன்யாகு, பாரம்பரிய இந்திய உடையை அணிந்து பிரதமர் மோடியை ஆச்சரியப்படுத்தினேன் என்று இந்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த டுவிட்டர் பதிவை பகிர்ந்த பிரதமர் மோடி, உண்மையில் அருமையாக இருக்கிறது. இந்திய உடைகள் மீதான உங்கள் அன்பு, எங்கள் நாட்டின் வளமான கலாச்சாரம் மற்றும் மரபுகள் மீதான உங்கள் மரியாதையைப் பிரதிபலிக்கிறது என்று பதிலளித்துள்ளார்.