2026-ம் ஆண்டு ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி பயிற்சி ஆட்டத்தில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணிக்கு, டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பு தங்களின் பலம் மற்றும் பலவீனங்களைச் சோதித்துப் பார்க்க இது ஒரு முக்கியமான வாய்ப்பாக அமையும். இந்த போட்டிபிப்ரவரி 4-ம் தேதி, நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டில் மைதானத்தில், இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்கு நடைபெற உள்ளது.

உலகக் கோப்பைத் தொடர் அதிகாரப்பூர்வமாக பிப்ரவரி 7-ம் தேதி தொடங்குகிறது. இதில் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்தியாவைப் போலவே பாகிஸ்தான் அணியும் ஒரே ஒரு பயிற்சி ஆட்டத்தில் மட்டுமே விளையாடுகிறது. பாகிஸ்தான் பிப்ரவரி 4-ம் தேதி கொழும்புவில் அயர்லாந்துடன் மோத உள்ளது.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற முன்னணி அணிகள் எந்தவொரு பயிற்சி ஆட்டங்களிலும் பங்கேற்கவில்லை. இருப்பினும், உலகக் கோப்பைக்கு முன்பாக இங்கிலாந்து அணி இலங்கையுடனும், ஆஸ்திரேலியா பாகிஸ்தானுடனும் இருதரப்பு தொடர்களில் விளையாடுவதால், அவர்களுக்குத் தேவையான பயிற்சி கிடைத்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.