ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி சந்தித்த மோசமான தோல்விக்குப் பிறகு, அந்த அணியில் பல மாற்றங்கள் தேவை என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆனால் அவற்றில் முதன்மையானது அணியின் கலாச்சாரம்தான் என அவர் தெரிவித்துள்ளார்.

அணி மீதான கட்டுப்பாடுகளும் வீரர்களின் சுயக்கட்டுப்பாடும் மிகவும் தளர்வாகவும் கட்டுப்பாடற்றதாகவும் உள்ளன, குறிப்பாக அணியின் குடிபோதைக் கலாச்சாரத்தை முதலில் ஒழிக்க வேண்டும் என்று மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து டி20 கேப்டனாக அறிவிக்கப்படும் முன்பு இங்கிலாந்தின் டெஸ்ட் வைஸ் கேப்டன் ஹாரி புரூக் நியூஸிலாந்தில் ஒரு மதுபான விடுதிக்கு செம குடிபோதையில் சென்றுள்ளார், ஏற்கெனவே அவர் நிற்க முடியாத அளவுக்குக் குடித்திருந்ததால் பவுன்சர் அவரை உள்ளே விட மறுக்க அங்கு கைகலப்பில் ஈடுபட்டார், இது தெரியவந்தவுடன் மன்னிப்புக் கோரினார்.

சமீபத்திய ஆஷஸ் தொடரின் போது பகலிரவு பயிற்சி ஆட்டத்தைத் துறந்து நூசா கடற்கரையில் மதுபோதை விருந்தில் களியாட்டம் போட்டனர். இதனையடுத்து பிரிஸ்பனிலும் தோல்வி, அடுத்து அடிலெய்டிலும் தோற்று ஆஷஸ் தொடரை 11 நாட்களில் இழந்தனர். இது கடும் சர்ச்சைகளை அங்கு ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்தான் மைக்கேல் வான் தி டெலிகிராப் ஊடகத்தில் எழுதிய பத்தியில் இங்கிலாந்தின் குடி கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.