தஞ்சாவூர்: காவிரிப் பிரச்சினையை தமிழகமே தீவிரமாக பேசிக் கொண்டிருக்க, முதல்வர் விஜய் ஆய்வு என்கிற பெயரில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கிறார் என தஞ்சாவூரில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சாடினார்.

தஞ்சாவூரில் இன்று திமுக சார்பில், தவெக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வரவேற்றார். மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ஜவாஹிருல்லா, மக்கள் ஜனநாயக கட்சி மாநிலத் தலைவர் தமிமுன் அன்சாரி,, திராவிடர் கழக மாநில பொதுச் செயலாளர் ஆர்.ஜெயக்குமார், திமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள், இந்நாள் எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசியது: “ஆடிப்பெருக்கு காலத்தில், காவிரி டெல்டா ஆறுகள் தண்ணீர் இன்றி வறண்டு பாலைவனம் போல காட்சி அளிக்கின்றன. குறுவை சாகுபடியைக் காப்பாற்ற முடியாமல், சம்பா சாகுபடியின் நிலை என்னவாகுமோ என்று விவசாயிகள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். காவிரி மேலாண்மை வாரியத் தீர்ப்பின்படி கிடைக்க வேண்டிய உரிய தண்ணீரைப் பெற தமிழக அரசு தவறிவிட்டது. மேகேதாட்டு அணை கட்ட முயலும் கர்நாடக அரசைக் கண்டித்தும், தமிழக விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும், தமிழக அரசு உரிய சட்டப் போராட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். குறுவை சாகுபடி பொய்த்ததால் சுமார் 14 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகளின் கோரிக்கைகளையும், காவிரி நீர் தொடர்பான உரிமைகளையும் வலியுறுத்தி, ஆக.5-ம் தேதி தொடங்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் திமுக சார்பில் உறுதியாகக் குரல் எழுப்பப்படும். காவிரிப் பிரச்சினையை தமிழகமே தீவிரமாக பேசிக் கொண்டிருக்க, முதல்வர் விஜய் ஆய்வு என்கிற பெயரில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆடி 18-ம் நாளான இன்று ஆடிப்பெருக்கில் ஆறு முழுவதும் தண்ணீர் வழிந்து ஓடும். ஆனால், இப்போது டெல்டா நீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. திமுக ஆட்சி இருந்திருந்தல் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா? நிர்வாகத் திறனற்ற ஒரு டம்மி முதல்வரால் இந்த நிலைமை தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.