தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் வரும் 26-ம் தேதி, தி.மு.க. மகளிரணி மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டு ஏற்பாடுகளை ஆய்வு செய்த கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது,

மேற்கு மண்டலத்தில் வெல்லும் தமிழ் பெண்கள் மகளிர் அணி மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அந்த மாநாடு, பெண்களின் ஆதரவு யார் பக்கம் இருக்கிறது என்பதை மிகத் தெளிவாக எடுத்து சொல்லக்கூடிய வகையில் அமைந்திருந்தது. தமிழகம் முழுவதும் பெண்கள் தி.மு.க.வை சார்ந்து இருக்கிறார்கள். சுமார் 1.25 லட்சம் மகளிருக்கு மேல் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

அ.தி.மு.க. தங்களுக்கு உடன்பாடு இல்லாதவர்களுடன் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கினால், எப்படி வெற்றி பெற முடியும். அ.தி.மு.க. என்ற கட்சி இன்னும் கொஞ்சம் நாளாவது பத்திரமாக இருக்க வேண்டும் என்றுதான் தொடர்ந்து சொல்லிக் கொண்டு உள்ளோம். எங்களது கவலையும் அதுவாகத்தான் உள்ளது. தேர்தல் வருவதால் பிரதமர் மோடி தமிழகத்துக்கு அடிக்கடி வருவார். இவ்வாறு அவர் கூறினார்.