சென்னை: அதிமுக ஆட்சியின்போது மதுரை மத்திய சிறைச்சாலையில் நடைபெற்ற 100 கோடி ரூபாய் ஊழல் வழக்கை விரைந்து விசாரித்து முடித்து 4 மாதத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தவறினால் விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்று நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞரும், சிறைக்கைதிகள் உரிமைகள் மைய இயக்குநருமான பி. புகழேந்தி தாக்கல் செய்திருந்த பொது நல மனுவில், மதுரை மத்திய சிறையில் கைதிகளால் தபால் அனுப்புவதற்கான கவர்கள், அட்டைகள் போன்ற ஸ்டேஷனரிப் பொருள்கள், மருத்துவ உதவிப்பொருள்கள் தயாரிக்கப்பட்டு அவை பல்வேறு அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது போலவும், கைதிகளுக்கு சம்பளம் கொடுத்தது போலவும் போலியாக கணக்கு தயாரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் கடந்த 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் சுமார் 100 ரூபாய் கோடி வரை ஊழல் நடந்திருப்பது தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக தெரியவந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. அதே வேளையில் புகாரில் முகாந்திரம் இருந்தால் லஞ்ச ஒழிப்பு துறை வழக்கை விசாரிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறைவாசியின் மனைவியான கோகிலா என்பவர் தாக்கல் செய்திருந்த வழக்கில் தனது கணவர் சிறைச்சாலையில் உள்ள பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வந்ததாகவும் ஆனால் அவருக்கு உரிய சம்பளமோ நன்னடத்தை மதிப்பெண்ணோ வழங்கப்படவில்லை என வழங்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புகழேந்தி, சிறை வாசிகளுக்கு சம்பளம் வழங்கியது போன்று போலிக்கணக்குகளை உருவாக்கி 100 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்று வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டினார். விசாரணை மிக மந்தமாக நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட காவல்துறை தரப்பு வழக்கறிஞர், விரிவான விசாரணையை முடிப்பதற்கு மேலும் கால அவகாசம் தேவை எனவும், விரைந்து விசாரித்து முடித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு விசாரணை குழுவை அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மூத்த ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு குழுவை அமைத்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நான்கு மாதத்திற்குள் இறுதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்ய தவறினால் விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற நேரிடும் என்று எச்சரித்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளும் எடுக்க உத்தரவிடப்படும் எனும் தெரிவித்தனர்.