காவிரி அணைகளின் இயக்கத்தை மத்திய அரசு எடுத்து நடத்த வேண்டும் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
அவரது பேட்டி: கர்நாடகாவுக்கு ஒருமனதாக இருப்பது நமக்கு தண்ணீர் கொடுக்க கூடாது என்பது தான்; அவர்கள் 100, 200 வருடமாக தண்ணீர் தராமல் இருக்கிறார்கள்; நமக்கு முன்னாடி இருந்த கால கட்டத்தில், திமுக ஆட்சியில் வலுவான பிடி இருந்தது. 50 வருடம் ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தை 1974ல் நாம் தவற விட்டுவிட்டோம். அப்பொழுதே நாம் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வாயிலாக தீர்வு கண்டு இருக்க வேண்டும்.
இது பற்றி எல்லாம் துரைமுருகன் ஏதுமே பேசவில்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதி செய்த தவறு தான் இப்போது வரை பாதிப்பை ஏற்படுத்துகிறது. 3500 கன அடி நீர் கொடுக்க சொல்லியும் அதனை கர்நாடகா ஏற்றுக்கொள்ள வில்லை. காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு இருக்கும் ஒரே தீர்வு; சட்டப்படி சுப்ரீம் கோர்ட்டை நாடுவது தான். அது போல வேற என்ன இருக்கிறது என்பது அனைத்தையும் முதல்வர் விஜய் ஆராய்ந்து விரைவாக அறிவிப்பார். சுப்ரீம்கோர்ட்டை நாம் கண்டிப்பாக, நிச்சயமாக அணுகுவோம். மத்திய அரசுக்கு தேவையான அழுத்தங்கள் எல்லாம் கொடுப்போம்.
மத்திய அமைச்சர் ஒருவரே கர்நாடகாவுக்கு ஆதரவாக, அணை ஏன் கட்ட கூடாது என்று பேசுகிறார். அவர் தமிழகத்திற்கு எதிராக பேசி இருக்கிறார். தமிழகம் விரோதி மாதிரி பேசி இருக்கிறார். கர்நாடகாவில் பாஜ, காங்., என யார் ஆட்சி செய்தாலும், அவர்களது ஒரே முடிவு தமிழகத்திற்கு நீர் திறக்கக்கூடாது என்பதுதான். மாநிலங்கள் ஒன்றும் செய்ய முடியாது, மத்திய அரசு தான் செய்ய வேண்டும். அணைகளின் இயக்கத்தை மத்திய அரசு எடுத்து நடத்த வேண்டும். இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.