விமான விபத்தில் பலியான மகராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.

மகராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் பயணம் செய்த சிறிய ரக விமானம் நேற்று முன்தினம் காலை புணே மாவட்டத்தில் உள்ள பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அஜீத் பவார், விமானிகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த நிலையில், அஜீத் பவாரின் சொந்த தொகுதியான பாராமதியில் உள்ள வித்யா பிரதிஸ்தான் திடலில் நேற்று பகல் 12 மணியளவில் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் அஜீத் பவாரின் உறவினரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான சரத் பவார், மத்திய உள்துறை அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்காரி, பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நவீன், மகராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொண்டர்களும், மக்களும் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.

முன்னதாக பாராமதியில் உள்ள அஜீத் பவாரின் இல்லத்தில் இருந்து வித்யா பிரதிஸ்தான் திடலுக்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட அவரின் உடலுக்கு சாலையின் இருபுறங்களிலும் நின்று மக்கள் அஞ்சலி செலுத்தினர்.