சென்னை: கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆறு பேருக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தபோது, அவர்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
Advertisement
இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கிரி மற்றும் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆகியோர், இந்த வழக்கில் சபாநாயகர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ராஜினாமா செய்தவர்களிடம் சுயமாக பதவி விலகினார்களா என்று விசாரணை நடத்தி, திருப்தியடைந்த பின்னர் ஏற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த விசாரணை என்பது வெறும் சம்பிரதாயம் அல்ல. அரசியல் சாசன கடமை. அர்த்தமுள்ள எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. ராஜினாமா கடிதங்களை அளித்த சில நிமிடங்களில், தலைமைச் செயலகத்தில் அமைச்சரை சந்தித்து தவெகவில் இணைந்திருக்கின்றனர்.
ஆனால், இது சம்பந்தமாக சபாநாயகர் முழுமையான விசாரணை நடத்தாமல், ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளார். ராஜினாமாவை ஏற்பதற்கு முன்பு தகுதிநீக்க புகார் அளித்த மனுதாரரான அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு எந்த நோட்டீசும் அனுப்பப்படவில்லை. குதிரை பேரம் நடந்துள்ளது குறித்து ஆளுநருக்கும் புகார் அளிக்கப்பட்டது என்று வாதிட்டனர். சபாநாயகர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், ராஜினாமா ஏற்றுக் கொண்டதால் தகுதிநீக்க நடவடிக்கை இல்லாமல் ஆகி விடாது. ராஜினாமாவை ஏற்றது சட்டப்படி செல்லுபடியானதுதான். ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ய விரும்பினால் பதவியில் நீடிக்குமாறு நிர்பந்திக்க முடியாது.
உறுப்பினர்களின் ராஜினாமாவை ஏற்காவிட்டால் அது அரசியல் சாசன கடமையை செய்யத் தவறியதாகிவிடும். சுய விருப்பப்படி ராஜினாமா செய்தாரா என்பதை மட்டும் தான் விசாரிக்கமுடியும். அமைச்சர் பதவி, பணத்துக்காக ராஜினாமா செய்தார்களா, குதிரைபேரம் நடந்ததா என்பதை தகுதிநீக்க நடவடிக்கையில் தான் விசாரிக்க முடியும். ராஜினாமாவின் நோக்கம் என்ன என்பதை ராஜினாமாவை ஏற்கும் போது விசாரிக்க முடியாது. சபாநாயகர் எந்த விதிமீறலும் செய்யவில்லை. எனவே, இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சதீஷ் பராசரன், மேனகா குருசாமி ஆகியோர், எம்.எல்.ஏ.வாக இருந்து சலுகைகளை பெற்றுக் கொண்டு வேறு கட்சிக்கு ஆதரவளித்தால் தான் ஊழல் நடவடிக்கை.
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு வேறு கட்சிக்கு இணைவது ஜனநாயக அரசியல். எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா உண்மையானவை. சுய விருப்பப்படி அளிக்கப்பட்டவை. ராஜினாமா கடிதங்கள் தபாலிலோ, வேறு நபர்கள் மூலமாகவோ அனுப்பப்பட்டு இருந்தால் அவற்றின் உண்மைத்தன்மை குறித்து சபாநாயகர் விசாரணை நடத்தலாம். ஆனால், நேரில் சந்தித்து கைப்பட எழுதி ராஜினாமா கடிதம் அளித்தால் அதன் உண்மைத்தன்மையை சந்தேகிக்க முடியாது. எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை தொகுதி மக்கள் தான் கேள்வி கேட்க முடியும் என்று வாதிட்டனர்.
சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், உண்மையாக, சுய விருப்பத்தின் அடிப்படையில் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகல் கடிதம் அளித்தால் அதை சபாநாயகர் ஏற்காமல் இருக்க முடியாது என தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
* ராஜினாமா கடிதங்களை அளித்த சில நிமிடங்களில், தலைமைச் செயலகத்தில் அமைச்சரை சந்தித்து தவெகவில் இணைந்தது சம்பந்தமாக சபாநாயகர் முழுமையான விசாரணை நடத்தாமல், ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளார். – எடப்பாடி தரப்பு
* ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ய விரும்பினால் பதவியில் நீடிக்குமாறு நிர்பந்திக்க முடியாது- சபாநாயகர் தரப்பு
* எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு வேறு கட்சிக்கு இணைவது ஜனநாயக அரசியல்- ராஜினாமா எம்எல்ஏக்கள் தரப்பு