தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில், அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்ட வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது:
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் முதியோர் ஓய்வூதியத் தொகை ரூ. 2000 ஆக உயர்த்தப்படும். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கான மாத உதவித் தொகை ரூ. 1,200-ல் இருந்து ரூ. 2000 ஆக உயர்த்தப்படும். மாணவர்களின் வங்கிக் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். அந்த தொகையை அரசே ஏற்கும்.
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆண்டுக்கு 3 சமையல் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். ஜல்லிக்கட்டில் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ. 10 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ. 2 லட்சமும் வழங்கப்படும். அரசாணை வெளியிட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அரசு சார்பில் ரூ. 5 லட்சம் வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். இஸ்லாமிய உள்ளிட்ட சிறுபான்மையின பெண்கள் சுயதொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
ஏற்கெனவே, ஜனவரி 17-ம் தேதி முதல்கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை, மகளிர் உதவித் தொகை ரூ. 2,000 ஆக உயர்த்தப்படும், ஆண்களுக்கும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லை, கிராமப்புறங்களில் வீடுகள் இல்லாதவர்களுக்கு அம்மா இல்லம் திட்டம் சார்பில் நிலம், நகர்ப்புறங்களில் வசிக்கும் வீடுகள் இல்லாதவர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள், 150 நாள்கள் வேலைத்திட்டம், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.