ஆந்திர பிரதேசம் விஜயநகரம், போகாபுரத்தில் உள்ள அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ரூ.17,900 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். முன்னதாக பிரதமர் மோடியை 13 ஆயிரம் பெண்கள் வரவேற்றனர்.
விஜயநகரத்தில் உள்ள போகபுரத்தில் அமைந்துள்ள அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையம், ரூ.4,727 கோடி செலவில், 31 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டது. ஆண்டுக்கு 60 லட்சம் பயணிகள் உபயோகப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ஆந்திரப் பிரதேசம் எப்போதுமே ஒரு தொலைநோக்குப் பார்வையைக் கொண்டுள்ளது. மாநில இளைஞர்கள் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் அபாரமான திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். முதலீடு வேலைவாய்ப்பை உருவாக்குகிறது என்பதே எங்கள் அரசின் தாரக மந்திரம். அதனால்தான் அரசு தனது முதலீட்டை அதிகரித்துள்ளது.
தனியார் துறையையும் முதலீடு செய்ய நாங்கள் ஊக்குவிக்கிறோம். ஏனென்றால், முதலீடு அதிகரிக்கும்போது, உற்பத்தி அதிகரிக்கிறது. உற்பத்தி அதிகரிக்கும்போது, ஏற்றுமதி அதிகரிக்கிறது, ஏற்றுமதி அதிகரிக்கும்போது புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. வேலைவாய்ப்பு அதிகரிக்கும்போது, மக்களின் வருமானம் உயர்கிறது, குடும்பங்களின் வாழ்க்கை மேம்படுகிறது.
கடந்த 12 ஆண்டுகளில் நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபாரமான முன்னேற்றம் கண்டுள்ளது. 2014ம் ஆண்டு வரை, நாட்டில் 74 விமான நிலையங்கள் மட்டுமே செயல்பாட்டில் இருந்தன; இன்று, அந்த எண்ணிக்கை 166 ஆக உள்ளது. ஒரு காலத்தில், விமானப் பயணம் முக்கிய நகரங்களுக்கு மட்டுமே இருந்தது. பாஜ ஆட்சியில், சிறிய நகரங்களில் உள்ள சாதாரண மக்கள் கூட விமானத்தில் பயணிக்கின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.