சென்னை, செப்.6-
இந்தியா கூட்டணிக்குள் வரும் எண்ணம் தவெகவுக்கு இல்லை என்றும், விஜய்யை நம்பினால் கதைக்கு ஆகாது என்று காங்கிரஸ் கட்சியின் வியூக வகுப்பாளர் சுனில் கனகோலு ரிப்போர்ட் கொடுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் மூலமாக அழுத்தம் கொடுக்கவும் ஏற்பாடுகள் நடப்பதாக பேச்சுகள் அதிகரித்துள்ளது.
கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக அடுத்த பிரதமர் விஜய் என்று தவெக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் தொடர்ச்சியாக பேசி வருகின்றனர். இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 9.2% பேர் ஆதரவு அளித்திருப்பது காங்கிரஸ் தலைமையையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இதன் காரணமாகவே விஜய்யை கட்டுப்படுத்த மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி இருவரும் நேரில் சென்று சந்தித்தனர்.
ஆனால் வட மாநிலங்களில் விஜய் தொடர்பாக வெளியிடப்படும் ரீல்ஸ் மில்லியன்களில் பார்வையாளர்களை அள்ளுகிறது. விஜய்யின் இந்த செயல்பாடுகளை பாஜக தலைமையும் ரசிக்கிறது. தென்னிந்தியாவில் விஜய்யின் வளர்ச்சியால், பாஜகவுக்கு லாபம் என்றே அமித்ஷா கணக்கு போடுகிறார். அதேபோல் காங்கிரஸ் தரப்பில் பேசப்பட்ட போதும், அதனை காதில் வாங்கும் நிலையில் தவெக இல்லை.
கேரளா, கர்நாடகா மாநிலங்களில் தவெகவை உருவாக்க விஜய் வேகமாக காய் நகர்த்தி வருகிறார். இதனையறிந்த காங்கிரஸ் கட்சி தலைமை அதிருப்தியில் இருக்கிறது. அதேபோல் இந்தியா கூட்டணியில் இணைவது தொடர்பாக விஜய் இதுவரை எந்தவித வார்த்தையையும் கூறவில்லை. லோக்சபா தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் 15 சீட்கள் வரை எதிர்பார்க்கிறது.
திமுக கூட்டணியில் இருந்த போது 9 இடங்கள் ஒதுக்கப்பட்டது. தவெக கூட்டணியில் 13 முதல் 15 தொகுதிகள் ஒதுக்கவில்லை என்றால், அது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை உருவாக்கும். ஆனால் தவெகவோ 30 தொகுதிகளில் போட்டியிடும் திட்டத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படியான சூழலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனகோலு ஒரு ரிப்போர்ட்டை கொடுத்துள்ளார்.
அதன்படி இந்தியா கூட்டணியில் இணையும் எண்ணம் தவெகவுக்கு இல்லை. முதல்வர் விஜய்யை நம்பினால், எதுவும் நடக்காது. மீண்டும் திமுகவுடன் இணைவதே நல்லது. தவெக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் மூலமாகவும் சில அழுத்தம் கொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.