கறிகோழிக்கு தீவனக் கட்டுப்பாடு நெறிமுறைகளை செயல்படுத்தாததைக் கண்டித்து, தமிழ்நாடு, புதுச்சேரியில் வருகிற 31 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கோழி இறைச்சி விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று தஞ்சாவூரில் நடந்தது. இதில் தீவனக் கட்டுப்பாட்டை அமல்படுத்தக் கோரி வருகிற 31 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கோழி இறைச்சி விற்பனை செய்யப் போவதில்லை என அறிவித்துள்ளனர். முன்னதாக தமிழகத்தில் உள்ள கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்கள், பண்ணையிலிருந்து கோழிகளை விற்பனைக்கு அனுப்புவதற்கு முன், அரசு விதித்துள்ள தீவனக் கட்டுப்பாடு விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல், ஆதாயத்திற்காக அதிக தீவனங்களை கோழிகளுக்குக் கொடுப்பதாக தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பினர் குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக வணிகர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ஒரு வார காலத்திற்கு தமிழ்நாடு முழுவதும் கோழி விற்பனையை முழுமையாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கோழி ஏற்றும் தொழிலாளர்களுக்கும் கேடு விளைவிக்கிறது எனவும் அவர்கள் புகார் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. கோழி இறைச்சி விற்பனையை நிறுத்தத்தால் ஏற்படும் தட்டுப்பாடு காரணமாக வரும் நாட்களில் கோழி இறைச்சி விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.