வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்து கேரள முதல்வர் பினராய் விஜயன் உத்தரவிட்டுள்ளார். பல்வேறு வங்கிகளின் 555 பேர் வாங்கிய ரூ. 18.75 கோடி கடனை கேரள அரசே திருப்பிச் செலுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் கடந்த 2024 ஜூலை 30-ம் தேதி பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டதில், ஏராளமான வீடுகள் புதைந்து 250-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த கோர சம்பவத்தை தொடர்ந்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்புகளின் துணையுடன் கேரள அரசு உதவி வருகின்றது. வீடுகளை இழந்தவர்களில் 300 பேருக்கு முதல்கட்டமாக முடிக்கப்பட்ட வீடுகளை கேரள அரசு இம்மாதம் ஒப்படைக்கவுள்ளது.
இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட 555 பேர் பல்வேறு வங்கிகளில் வாங்கிய ரூ. 18.75 கோடி மதிப்பிலான 1,620 கடன்களை முதல்வர் நிவாரண நிதியில் இருந்து செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, ஏற்கெனவே கேரள வங்கியால் தள்ளுபடி செய்யப்பட்ட ரூ. 93 லட்சம் கடனையும் திருப்பி செலுத்த மாநில அரசு முன்வந்துள்ளது. மக்களின் கடன் மதிப்பீடுகள் பாதிக்காத வகையில் வங்கிகளின் குழுவுடன் ஒருங்கிணைந்து செயல்பட தலைமைச் செயலருக்கு முதல்வர் பினராய் விஜயன் உத்தரவிட்டுள்ளார்.