சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் பேரனும் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் சிஇஓ இன்பன் உதயநிதி தனது பட்டப் படிப்பை லண்டனில் முடித்துள்ளார். பேரனின் பட்டமளிப்பு விழாவுக்காக குடும்பத்துடன் மு.க. ஸ்டாலின் லண்டன் சென்றிருந்தார். இந்நிலையில், பேரன் பட்டம் வாங்கியதும் தாத்தா அவரை அரத்தழுவி மகிழ்ச்சி வெள்ளத்தில் கட்டியணைத்த புகைப்படங்களை இன்பன் உதயநிதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


ரெட் ஜெயன்ட் மூவிஸை முன்னதாக உதயநிதி ஸ்டாலின் நிர்வகித்து வந்தார். அதன் பின்னர் அவர் அரசியலில் முழு கவனத்தை செலுத்தி விளையாட்டுத் துறை அமைச்சராகவும் துணை முதல்வராகவும் கடந்த ஆட்சியில் இருந்த நிலையில், அந்த பொறுப்பை மகன் இன்பன் உதயநிதியிடம் வழங்கினார். தனுஷ் நடித்த இட்லி கடை, சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி சமீபத்தில் வெளியான கட்டா குஸ்தி 2 மற்றும் இதயம் முரளி உள்ளிட்ட படங்களை இன்பன் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கி வெளியிட்டது. ரஜினிகாந்த் - கமல்ஹாசன் படம்: ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் பல ஆண்டுகளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை இயக்குநர் நெல்சன் இயக்க உள்ளார். அந்த படத்தை இன்பன் உதயநிதி தான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் தர்மன் படத்தில் நடித்து முடித்த பின்னர், அந்த படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகும் என்கின்றனர்.


லண்டனில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான பட்டப்படிப்பை இன்பன் உதயநிதி முடித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குநர் கிருத்திகா உதயநிதியின் மகனான இன்பன் உதயநிதி பட்டப் படிப்பை முடித்து விட்டு சீக்கிரமே மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் எனக் கூறுகின்றனர். லண்டனில் பேரன் பட்டம் வென்றதை பார்த்ததும் தாத்தா மு.க. ஸ்டாலின் கட்டியணைத்து கொஞ்சிய காட்சியையும் பாட்டி பக்கத்தில் இருந்து அதை பார்த்து சிரித்த காட்சியும் இன்பன் உதயநிதி வெளியிட்டுள்ள போட்டோவில் இடம்பெற்றுள்ளது. மேலும், உதயநிதி ஸ்டாலினும் தனது மகன் பட்டம் வென்றதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு கொண்டாடியுள்ளார். ஒட்டுமொத்த குடும்பமே இன்பன் உதயநிதியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று சந்தோஷமடைந்துள்ளனர்.