புதுடெல்லி: இந்தியாவில் மின்னணு பணப் பரிவர்த்தனையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய யுபிஐ தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதன் பிரம்மாண்டமும் பயனும் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்பட வைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “பத்து ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ, இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைப் பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. யுபிஐ-ன் பிரம்மாண்ட அளவும் அது சென்றடைந்த பரந்த எல்லையும், ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படக்கூடிய விஷயமாகும். என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், உங்கள் யுபிஐ அனுபவம் குறித்தும் அது உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் என்னிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
யுபிஐ தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில் மின்னணு பணப் பரிவர்த்தனை தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. 2016 ஆகஸ்ட் 25 அன்று தொடங்கப்பட்ட இத்திட்டம், நிதிச் சேவையை அனைவருக்கும் கொண்டு சேர்த்ததில் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது. தற்போது லட்சக்கணக்கான பயனர்களின் விருப்பக் கட்டண முறையாக இது மாறியுள்ளது. அத்துடன் நாட்டின் பணப் பரிவர்த்தனை முறையையும் மாற்றியமைத்துள்ளது. மின்னணு இடைவெளியை குறைத்தல், நிதி சேவைகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல், மின்னணு நிதிச் சேவைகளுக்கான அணுகலை விரிவுபடுத்துதல் ஆகியவற்றின் மூலம், நாடு முழுவதும் தனி நபர்களையும், சமூகங்களையும் யுபிஐ வலுப்படுத்தியுள்ளதுடன், பரவலான பொருளாதார பங்கேற்பையும் ஊக்குவித்துள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.