தானே: மஹாராஷ்டிராவில் பெய்த கனமழையால் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால், அவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தானே மாவட்டத்தில் உள்ள பிவண்டி பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழையால், 4 மாடி கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பல தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை, போலீசார், தீயணைப்புப் படை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதற்கட்ட தகவல்களின்படி, இடிபாடுகளுக்குள் 8 முதல் 10 பேர் வரை சிக்கியிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. மீட்புப் பணியில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர், இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருந்த ஒரு பெண்ணை உயிருடன் மீட்டனர். அவர் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இடிபாடுகளில் சிக்கியதில் இதுவரையில் 6 பேர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால், பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.