புதுடெல்லி: மத்திய அமைச்சர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் கவனம் செலுத்த பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் அறிவுரை வழங்கியுள்ளார்.
மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது அமைச்சர்களிடம் மூடிய உறையில் வழங்கப்பட்டது. அதில் அமைச்சர்களின் செயல்பாட்டுத் தரவரிசைகளும் இடம்பெற்றிருந்தன. அமைச்சரவைக் கூட்டத்தின்போது ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒரு உறை வழங்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. மே 1 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான காலகட்டத்தில், அந்த நான்கு இணைய ஊடகத் தளங்களில் அமைச்சர்களின் பதிவுகள், பல்வேறு விவகாரங்கள் குறித்த அவர்களின் நிலைப்பாடுகள் மற்றும் கருத்துகள் உள்ளிட்ட தகவல்கள் அந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்தன.
குறிப்பாக, அப்பதிவுகளுக்குக் கிடைத்த பொதுமக்களின் எதிர்வினைகளும் இந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்தன. ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் சக அமைச்சர்கள் அல்லது எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஒப்பிடுகையில் எந்த நிலையில் உள்ளனர் என்பதைக் காட்டும் ஒப்பீட்டுத் தகவல்களும் அந்த அறிக்கையில் இருந்தன. இந்த அறிக்கையைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்திய பிரதமர் மோடி, நவீன தகவல் தொடர்பு ஊடகங்களின் முக்கியத்துவத்தை அமைச்சர்களுக்கு மீண்டும் விளக்கினார். இன்றைய இளைஞர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் உள்ளனர் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.