மதுரை:


மதுரை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் நடைபெறும் லஞ்ச முறைகேடுகளை தடுப்பதற்காக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அவ்வப்போது திடீர் ரெய்டுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த ரெய்டுகள் உண்மையிலேயே முறைகேட்டின் வேரை கண்டறிகின்றனவா? அல்லது ஒரு நாள் கண்துடைப்பாக நடத்தப்படும் சோதனைகளாகவே முடிந்து விடுகின்றனவா? என்ற கேள்வி தற்போது பரவலாக எழுந்துள்ளது.


குறிப்பாக பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் (RTO) உள்ளிட்ட பொதுமக்கள் தினசரி அதிக அளவில் வந்து செல்லும் அலுவலகங்களில் நடைபெறும் சோதனைகள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களும் புகார்களும் முன்வைக்கப்படுகின்றன.


பொறுப்பு சார்பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது எப்படி சாத்தியம்?

பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் அதிகாரிகள் விடுப்பில் இருக்கும் நேரத்தில் பொறுப்பு சார்பதிவாளர்கள் பணிகளை கவனிப்பது வழக்கம். இந்நிலையில், அந்த அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்போது, பொறுப்பு அதிகாரியின் பங்கு என்ன என்பது குறித்தும் தெளிவான விசாரணை தேவைப்படுகிறது.


ஒரு அலுவலகத்தில் லஞ்சப் பரிவர்த்தனை தொடர்ந்து நடைபெறுவதாக புகார்கள் இருந்தால், ஒரே நாளில் நடத்தப்படும் சோதனையை விட, அந்த அலுவலகத்தில் சில நாட்கள் ரகசிய கண்காணிப்பு நடத்தி, பணம் எவ்வாறு கைமாறுகிறது என்பதைக் கண்டறிவதே பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.


RTO அலுவலகங்களில் முக்கிய நபர்கள் கைது செய்யப்படாதது ஏன்?

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அதிகாரப்பூர்வ பணிகளுக்கு அப்பாற்பட்டு, இடைத்தரகர்கள் மற்றும் கணினி ஆபரேட்டர்கள் மூலம் பணிகள் நடைபெறுவதாக பொதுமக்கள் தரப்பில் அவ்வப்போது புகார்கள் எழுகின்றன.


ரெய்டு நடைபெறும் போது பணம் பெற்றதாக கூறப்படும் நபர்கள் சிக்கினாலும், அந்தப் பணம் யாருக்காக பெறப்பட்டது? யாருடைய அறிவுறுத்தலின் பேரில் பெறப்பட்டது? என்பதுதான் முக்கியமான கேள்வியாக இருக்கிறது.


அப்படி இருக்கும்போது, RTO அலுவலகங்களில் முக்கிய நபர்கள் கைது செய்யப்படாதது ஏன்? என்ற கேள்வியும் எழுகிறது.


நிச்சயமாக, ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க சட்டப்படி போதுமான ஆதாரங்கள் தேவை. எனவே, வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்வது சரியான நடைமுறை அல்ல. அதே நேரத்தில், சோதனையில் சிக்கியவர்களிடம் மட்டுமே விசாரணையை முடித்துவிடாமல், பணப்பரிவர்த்தனையின் முழு பின்னணியையும் ஆராய வேண்டியது அவசியம்.


ரெய்டுக்கு முன்னரே ‘போன் கால்’ செல்கிறதா?

இந்த விவகாரத்தில் மிகப்பெரிய குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுவது “லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு வருவதற்கு முன்னரே சிலருக்கு தகவல் சென்று விடுகிறது” என்பதுதான்.


லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு வருவதற்கு முன்னரே அங்கிருக்கும் ‘புல்லுருவிகள்’ சிலரிடமிருந்து போன் கால் வந்து விடுகிறது என்றும், இதன் காரணமாக முக்கிய அதிகாரிகள் முன்கூட்டியே உஷாராகி விடுவதாகவும் கூறப்படும் புகார்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவை.


அதன் பின்னர், சோதனை நடைபெறும் நேரத்தில் முக்கிய அதிகாரிகள் விடுப்பில் சென்றதாக கணக்கு காட்டப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுகிறது.


இந்தக் குற்றச்சாட்டு உண்மையா?


உண்மையெனில் தகவல் எங்கிருந்து கசிகிறது?


யாருக்கு முன்கூட்டியே தகவல் செல்கிறது?


அந்தத் தகவல் சென்ற பிறகு யார் யார் அலுவலகத்தில் இல்லை?


என்பதை கண்டறிய தனிப்பட்ட விசாரணை நடத்தப்பட வேண்டாமா?


வாடிப்பட்டி RTO ரெய்டு — மீண்டும் எழும் கேள்விகள்

இதுபோன்ற கேள்விகளை எழுப்பும் வகையில் வாடிப்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு திடீர் ரெய்டு குறித்தும் பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன.


அந்த சோதனையில் கணினி ஆபரேட்டர்கள் மற்றும் பொதுமக்களை சிக்க வைத்து விட்டு, முக்கிய அதிகாரி மட்டும் தப்பித்துக் கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தற்போது பேசுபொருளாகியுள்ளது.


மேலும், ‘இதயம் பட நாயகன்’ ஆன் டூட்டியில் இருந்ததாக எஸ்கேப் ஆகிய கதை போன்ற விமர்சனங்களும் சமூக வட்டாரங்களில் முன்வைக்கப்படுகின்றன.


இவை அனைத்தும் உண்மையா அல்லது வெறும் குற்றச்சாட்டுகளா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் விசாரணை அமைப்புகள் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது.


ஒருநாள் கண்காணிப்பு போதுமா?

லஞ்ச ஒழிப்புத்துறையின் நோக்கம் ஒரு அலுவலகத்தில் பணம் வாங்கும் ஒருவரை மட்டும் பிடிப்பது அல்ல. லஞ்சம் எவ்வாறு வசூலிக்கப்படுகிறது, யாரிடம் செல்கிறது, யாருடைய அறிவுறுத்தலின் பேரில் வசூலிக்கப்படுகிறது, அதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை கண்டறிவதே உண்மையான வெற்றியாக இருக்க முடியும்.


அதற்காக ஒரு நாள் திடீர் ரெய்டு நடத்துவதற்கு பதிலாக, தேவையான இடங்களில் பல நாள் ரகசிய கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது.


அலுவலகத்திற்கு யார் வருகிறார்கள்?


யாரை சந்திக்கிறார்கள்?


யாரிடம் பணம் கொடுக்கப்படுகிறது?


யார் யாருக்கு போன் செய்கிறார்கள்?


ரெய்டுக்கு முன்னதாக யார் அலுவலகத்தை விட்டு வெளியேறுகிறார்கள்?


என்பது போன்ற தகவல்களை முறையாக சேகரித்தால் மட்டுமே முழு வலையமைப்பை கண்டறிய முடியும்.


‘சிறிய மீன்கள்’ மட்டும் சிக்கினால் போதுமா?

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகளில் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் அல்லது இடைத்தரகர்கள் சிக்குவது மட்டுமே நடவடிக்கையின் முடிவாக இருக்கக்கூடாது.


“பணம் வாங்கியவர் யார்?” என்பதோடு,


“பணம் யாருக்காக வாங்கப்பட்டது?”

“பணம் எங்கு சென்றது?”

“அதன் பின்னணியில் யார் இருந்தார்கள்?”


என்ற கேள்விகளுக்கும் பதில் கிடைக்க வேண்டும்.


மதுரை மாவட்டத்தில் பத்திரப்பதிவுத்துறை முதல் RTO அலுவலகங்கள் வரை, லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டுமானால், ரெய்டு நடத்தப்பட்டதா என்பது மட்டுமல்ல; அதன் முழுமையான முடிவு என்ன என்பதும் வெளிப்படையாக தெரிய வேண்டும்.


‘முதல்வர்’ பட பாணியில் சொன்னால்...

“ஒரு நாள் கண்காணிப்பாக இல்லாமல்... பல நாள் கண்காணித்தால்தான் திருடன் அகப்படுவான்!”


என்ற பாணியில், ஒருநாள் சோதனையை விட நீண்டகால ரகசிய கண்காணிப்பு, பணப்பரிவர்த்தனை கண்காணிப்பு மற்றும் தொடர்புடைய அனைவரின் பங்கு குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டால்தான் உண்மையான குற்றவாளிகள் வரை விசாரணை செல்லும்.


சிக்குவது கணினி ஆபரேட்டர்களும் பொதுமக்களுமா?

தப்பிப்பது முக்கிய அதிகாரிகளா?

அல்லது ரெய்டுக்கு முன்பே தகவல் கசிகிறதா?


இந்தக் கேள்விகளுக்கான விடை கிடைக்க வேண்டியது மதுரை மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.