சென்னை: மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்க வேண்டும் என மக்களுக்கு தமிழக கவர்னர் அர்லேக்கர் அழைப்பு விடுத்துள்ளார்.


அவரது அறிக்கை: ஆதார அடிப்படையிலான கொள்கை உருவாக்கம், திறமையான ஆளுகை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கும் வகையில், விரிவான, துல்லியமான மற்றும் நம்பகமான மக்கள்தொகை, சமூக, பொருளாதார மற்றும் வீட்டுவசதித் தரவுகளை உருவாக்கும் நோக்கில், நாட்டின் மிக முக்கியமான தேசிய தரவு சேகரிப்புப் பணிகளில் ஒன்றான 2027ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். சுயவிவரக் கணக்கெடுப்பு பணிகள் இன்று முதல் ஜூலை 31ம் தேதி வரையிலும், அதனைத் தொடர்ந்து வீட்டுப் பட்டியல் பதிவுகள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரையிலும் நடைபெறும். இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் வரலாற்றில் முதன்முறையாக, குடிமக்களுக்குப் பாதுகாப்பான இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் சுயவிவரக் கணக்கெடுப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தங்களின் கணக்கெடுப்புத் தகவல்களை இணையவழியில் எளிதாகப் பூர்த்தி செய்ய இயலும். தமிழக மக்கள் அனைவரும் இந்த வசதியை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு தங்களின் சுயவிவரக் கணக்கெடுப்பை நிறைவு செய்ய வேண்டும். 2027ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்துவதற்காக, ஒவ்வொரு குடும்பமும் முழுமையான மற்றும் துல்லியமான தகவல்களை அளித்து, கணக்கெடுப்பு அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும். சுயவிவரக் கணக்கெடுப்பைத் தேர்வு செய்யாத குடும்பங்கள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை நடைபெறும் வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பின் போது, மக்கள்தொகைக் கணக்கெடுப்பாளர்களால் கணக்கெடுக்கப்படுவார்கள்.


மக்கள் தொகைக் கணக்கெடுப்பை தேசியப் பொறுப்பாகக் கருதி இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் பணியில் ஒவ்வொரு குடிமகனும் முழு மனதுடன் பங்கேற்க வேண்டும். தமிழக மக்களின் ஒத்துழைப்பு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்துவதற்கும், மாநில மற்றும் நாட்டின் எதிர்காலத் திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான தரவுத்தளத்தை வலுப்படுத்துவதற்கும் பங்களிக்கும். இவ்வாறு கவர்னர் அர்லேக்கர் கூறியுள்ளார்.