பொதுமக்கள் அளிக்கும் அனைத்து மனுக்களுக்கும் அடுத்த 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களில் குடிநீர், மின்வெட்டு, ரேஷன் பொருட்கள், மகளிர் உதவித்தொகை ஓய்வூதியம் மற்றும் அரசு சேவை தொடர்பான புகார்கள் பொதுமக்களிடம் இருந்து அதிகளவில் குவிகின்றன. பொதுவாக பொதுமக்கள் அளிக்கும் மனுக்களின் மீதான தீர்வு கிடைக்க பல மாதங்கள் வரை ஆகும். அதில் சில மனுக்களுக்கு அரசு அதிகாரிகள் நடவடிக்கையே எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் அதிகரித்து வந்தன.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அனைத்து துறை அரசு அதிகாரிகளுக்கும் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது தமிழக அரசு. தலைமை செயலர் சாய்குமார் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, பொதுமக்கள் அளிக்கும் அனைத்து மனுக்களுக்கும் அடுத்த 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும். துறை சார்ந்த முக்கிய விவகாரங்கள் குறித்து தமிழக அமைச்சர்களுக்கு, அனைத்து துறை செயலர்கள் மற்றும் தலைவர்கள் அவ்வப்போது தகவல்கள் வழங்க வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் மனுக்களின் தீர்வு நிலை வாரந்தோறும் ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம்” என உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்கள் அளிக்கும் மனுக்களின் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணவில்லை என்றால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தது. இந்நிலையில் தற்போது 30 நாட்களுக்குள் மனுக்களுக்கு தீர்வு காணும் உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.