ஒரு பொருளின் தரம், அதன் உற்பத்தி முறை மற்றும் சிறப்பம்சங்கள் அந்த இடத்தின் மண், காலநிலை அல்லது அங்கு வாழும் மக்களின் பாரம்பரியத் திறமையோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும்போது அதற்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது.
அந்த வகையில் புவிசார் குறியீடு பெறுவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது. இதுவரை தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும், விளையும் 74 வகையான பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. சமீபத்தில் உறையூர் பருத்திச் சேலை, கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை, நாமக்கல் கல்சட்டி, தூயமல்லி அரிசி, அம்பாசமுத்திரம் சொப்புச் சாமான்கள் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளன.
கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் வரை 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருந்த நிலையில், கடந்த 21 மாதங்களில் 16 பொருட்களுக்கு மேலும் புவிசார் குறியீடு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. புவிசார் குறியீடு பெறுவதில் மாநிலங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உத்தரபிரதேச மாநிலம் 77 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றிருக்கிறது.