புதுவை சட்டசபையில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நடப்பு ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளதால் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. அதோடு தேர்தல் தேதியும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. எனவே அதற்கு முன்பாக சட்டசபை கூடி அரசின் செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக வருகிற 12-ம் தேதி புதுச்சேரி சட்டசபை கூடுகிறது.

அன்றைய தினம் முதல்வரும், நிதி அமைச்சருமானா ரங்கசாமி அரசின் 4 அல்லது 5 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதனை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

15-வது புதுச்சேரி சட்டப்பேரவையின் 6-வது கூட்டத்தொடர் கடந்த ஆண்டு மார்ச் 10-ம் தேதி அன்று கூட்டப்பட்டு 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. கவர்னர் உரையுடன் தொடங்கிய அந்த கூட்டத்தொடர் 13 நாட்கள் நடைபெற்று பின்னர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. அதன் 2-ம் பகுதி கடந்த செப்டம்பர் 18-ம் தேதி அன்று கூட்டப்பட்டு பேரவையின் அனைத்து அலுவல்களும் அன்றைய தினத்திலேயே நிறைவேற்றப்பட்டு மீண்டும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து 6-வது கூட்டத்தொடரின் 3-வது பகுதி வருகிற 12-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை வளகத்தில் உள்ள பேரவைக் கூட்டத்தில் மீண்டும் கூட்டப்படும். அரசின் அன்றைய தினத்தில் 2026-27-ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பேரவையில் முதல்வர் தாக்கல் செய்கிறார். பேரவையில் முன்வைக்க வேண்டிய விதிகள் மற்றும் ஏடுகள் ஏதேனும் இருந்தால், அவற்றையும் அன்றைய தினம் வைக்க அரசு துறைகளுக்கு அறுவுறுத்தப்படும்.

மேலும் 2025-2026 நிதி ஆண்டுக்கான கூடுதல் செலவினத்துக்கும் சட்டப்பேரவையில் ஒப்புதல் கோரப்படும். சட்டப்பேரவையை நீண்ட நாட்கள் நடத்த வேண்டும் என்பது எங்களின் ஆசையாக இருக்கிறது. இருப்பினும் சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக்குழு கூடிதான் எத்தனை நாட்கள் சட்டப்பேரவையை நடத்துவது என்று முடிவு செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.