புதுடில்லி: பிரதமர் மோடி வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் விளக்கம் அளிக்க, ஆகஸ்ட் 5,6ம் தேதிகளில் மெட்டா நிறுவன குழுவை இந்தியாவிற்கு அரசு அழைத்துள்ளது என மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் எஸ். கிருஷ்ணன் தெரிவித்தார்.

'நீட்' எனப்படும், இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வின் வினாத்தாள் கசிவை கண்டித்து, டில்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, கடந்த 28ல், 'மெட்டா'வுக்கு சொந்தமான, 'பேஸ்புக்' சமூக ஊடகத்தில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி, மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். இந்த வீடியோ, திடீரென பேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டது. எனினும், சில மணி நேரங்களில் அந்த வீடியோ மீட்டெடுக்கப்பட்டது. இது, தொழில்நுட்ப கோளாறு எனக் குறிப்பிட்ட பேஸ்புக் நிர்வாகம், மன்னிப்பும் கோரியது. இதற்கிடையே தகவல் தொடர்பு, தொழில்நுட்ப விவகாரங்களுக்கான பார்லி., நிலைக்குழு கூட்டம், அதன் தலைவரும், பா.ஜ., லோக்சபா எம்.பி.,யுமான நிஷிகாந்த் துபே தலைமையில் நடந்தது.

இந்நிலையில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் எஸ். கிருஷ்ணன் கூறியதாவது: பிரதமர் மோடி வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் விளக்கம் அளிக்க, ஆகஸ்ட் 5,6ம் தேதிகளில் மெட்டா நிறுவன குழுவை இந்தியாவிற்கு அரசு அழைத்துள்ளது. மெட்டா போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் திட்டமிட்டபடி செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். முக்கிய கணக்குகள் மீதான தவறான நடவடிக்கை குறித்து மெட்டா குழுவிடம் அரசு கேள்வி எழுப்பவுள்ளது. இவ்வாறு கிருஷ்ணன் கூறினார்.