டில்லியில் இன்று, சரத் பவாரும், அவரது மகள் சுப்ரியா சுலேவும் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினர்.

மஹாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவராக சரத்பவார் பதவி வகித்து வருகிறார். மஹாராஷ்டிராவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை கட்சி இழுக்கும் குற்றச் சாட்டுகளுக்கு மத்தியில், தனது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் (சரத்சந்திர பவார்) ஏற்பட்ட உட்கட்சிப் பிளவுகளால், சரத் பவார் இண்டி கூட்டணியில் இருந்து தேஜ கூட்டணிக்கு இடம் பெயரப் போவதாக தகவல்கள் வெளியாகின. சுப்ரியா சுலேவின் மகள், ஆர்.எஸ்.எஸ் தொடர்புள்ள நாக்பூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் திருமணம் செய்துகொண்ட பிறகு, பாஜகவுடனான மறைமுகத் தொடர்பு வேகம் பெற்றதாகவும், சுலேவுக்கு மத்திய அமைச்சரவையில் ஓர் இடமும், பவாரின் விசுவாசிகளுக்கு இரண்டு அமைச்சர் பதவிகளும் வழங்குவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் டில்லியில் இன்று (ஜூலை 22), சரத் பவாரும், அவரது மகள் சுப்ரியா சுலேவும் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினர். அப்போது அரசியல் பேசப்பட்டதாகவும், முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாகவும் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.