முசாபராபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி, மின்சார தட்டுப்பாடு மற்றும் பாகிஸ்தான் அரசின் அடக்குமுறைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்​றனர். இந்நிலையில் ரவாலகோட் புதிய பேருந்து நிலையம் அருகே நேற்று போராட்டத்​தில் ஈடுபட்​டிருந்த மக்களை பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். அப்போது இருதரப்பிலும் மோதல் ஏற்பட்​டது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்​திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். இது, பாகிஸ்​தான் அரசுக்கு எதிரான அதிருப்தியை மேலும் தீவிரப்படுத்தி அப்பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.


அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சமூகத்​தினர் நேற்று முன்தினம் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் அரசின் அடக்குமுறை குறித்து சர்​வதேச சமூகத்​தின் கவனத்தை ஈர்க்க அவர்​கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். “குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் வெளியேற வேண்டும். ஆயுதமற்ற மக்கள் மீது நடத்தப்படும் கொடூர தாக்​குதல்களுக்கு எதிராக சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்று அவர்​கள் வலியுறுத்தினர். மேலும், “இணைய சேவை முடக்கத்தால், சுமார் 40 லட்​சம் மக்கள் வெளியுலகத்​துடன் தொடர்பை இழந்​துள்ளனர். மக்​களின் உயிரைக் காக்கவும், மனிதாபிமான உதவிகளை வழங்கவும் இந்தியா தலையிட வேண்​டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை உறுதி செய்ய பூஞ்ச், தோடா எல்லைப் பகுதிகள் வழியாக கட்டுப்பாட்டுக்கோடு திறக்கப்பட வேண்​டும்” என்​றும் அவர்​கள் கோரிக்கை விடுத்தனர்.


இந்நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வாஸ் நேற்று கூறுகை​யில், “பாகிஸ்தானின் சட்​ட​விரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பகுதிகளில் பல தசாப்தங்களாக நடந்து வரும் சுரண்​டல், அடிப்படை உரிமை​கள் மறுப்பு, நிர்​வாக ஒடுக்​கு​முறை ஆகியவற்றின் நேரடி விளைவு​தான் இந்​தப் போராட்டங்கள். உள்ளூர் மக்களின் நியாயமான குறைகளை தீர்ப்பதற்குப் பதிலாக, பாகிஸ்​தான் அரசு பெண்​கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரின் மீதும் போலீஸ் வன்முறையை ஏவி வருகிறது. பலரின் உயிரிழப்புக்கு வழி​வகுத்துள்ளது. உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தை தடுத்​து, இணைய சேவையையும்​ முடக்கியுள்​ளது. பொதுமக்கள்​ மீதான இந்​த ஒடுக்​கு​முறைக்​கு பாகிஸ்தானை சர்வதேச சமூகம்​ பொறுப்பேற்க செய்ய வேண்டும்​” என்​றார்​.