திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டபாணி சுவாமிகள் அறிக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக தவெக அரசைக் கண்டித்தும், வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வலியுறுத்தியும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சனிக்கிழமை (ஜூலை 25) பழநியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, இன்று (ஜூலை 25) காலை பழநி ரவுண்டானா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், லஞ்சம் வாங்க மாட்டோம். லஞ்சம் வாங்குபவர்களை விடமாட்டேன் என்று சொல்லுகிற முதல்வர் விஜய், பழநியில் நடந்த பத்திரப்பதிவு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் தவெக அரசு மெத்தனமாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு தெரியாமல் இது நடந்திருக்காது. எனவே, முதல் குற்றவாளி தவெக அரசு தான். இதுவரைக்கும் பத்திரப்பதிவு செய்த அதிகாரி, விற்றவர், வாங்கியோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தூய ஆட்சி நடத்துகின்றேன் என்று சொல்லும் முதல்வர் விஜய் சிபிசிஐடியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
மகளிருக்கு ரூ.2500 தருவதாக சொன்னார்கள். ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் ஆகிவிட்டன. முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலினுடைய தம்பியாக வேலை செய்து கொண்டிருக்கிறார். தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்று சொன்ன கர்நாடகா முதல்வர் சிவகுமாரை சந்தித்துப் பேசுவதை விட்டுவிட்டு, காவிரி பிரச்சினைக்கு நீதிமன்றத்துக்கு சென்று வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.