சென்னை: “அரசியல் காரணங்களுக்காக பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யபட்டால், அது ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் என்று முதல்வர் விஜய் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். தவெக அரசுக்கு எதிராக சட்டப்பேரவை வளாகத்தில் திமுக எம்எல்ஏக்கள் முழக்கம் எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, “ பரந்தூரில் அமையவுள்ள இந்த விமான நிலையம் தமிழகத்தின் பொருளாதார, தொழில் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான ஒன்று. பரந்தூர் விமானநிலையம் வரும் என்ற நம்பிக்கையில் தான் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் எண்ணற்ற தொழிற்சாலைகள் வந்துள்ளன. பரந்தூர் விமான நிலையத்தை தேர்ந்தெடுக்கும் முன்பு சென்னையின் பல இடங்களை ஆய்வு செய்தோம். சென்னையின் புவியியல் அமைப்பின் படி மேற்குப் பகுதியில் விமான நிலையம் அமைவதே பொருத்தமாக இருக்கும், குறைவான மக்களே அங்கு பாதிக்கப்படுவார்கள் என்ற அடிப்படையில் பரந்தூரை தேர்வு செய்தோம். இப்போது பரந்தூர் திட்டத்தை கைவிடுவதாக கொள்கை முடிவெடுப்பதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இந்த திட்டம் ரத்து செய்யப்படுவதால் தமிழகத்துக்கு வரவேண்டிய தொழில்வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது.
பரந்தூர் விமான நிலையம் வரும் என்ற எதிர்பார்ப்பில் தொடங்கப்பட்ட மெட்ரோ திட்டம் என்னவாகும். பரந்தூரில் இந்த விமான நிலையத்தை அமைப்பதுதான் சரியாக இருக்கும். அரசியல் காரணங்களுக்காக இந்த திட்டம் நிறுத்தப்பட்டால், அது ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும். திமுக ஆட்சியில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது என்ற காரணத்துக்காக இந்த திட்டத்தை ரத்து செய்வது பொருளாதார வளர்ச்சியை தடுக்கும். இப்போது பல தொழில்கள் ஆந்திராவை நோக்கிச் செல்லும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கெனவே ஓசூர் விமான நிலையத்தை இழந்துவிட்டோம். மீண்டும் பரந்தூர் திட்டத்தையும் இழந்தால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி எங்கே போகும். தவெக அரசு சொல்லியுள்ள 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எப்படி அடைய முடியும்” என்றார்.