புதுடெல்லி: வட இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரித்துவரும் சூழலில், பொது மக்கள் தாங்களாகவே ஆண்ட்டி வைரல், ஆண்ட்டி பயாடிக் மருந்துகளை உட்கொள்ள வேண்டாம் என்று இந்திய மருத்துவக் கழகம் (ஐஎம்ஏ) அறிவுறுத்தியுள்ளது.
வட இந்தியாவில் கடந்த சில நாட்களாக பன்றிக்காய்ச்சல் (இன்ப்ளூயன்சா வைரஸ் எச்1என்1) பரவல் அதிகரித்து வருகிறது. டெல்லியில் மட்டும் 1770 பேருக்கு இத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் மேற்குவங்கத்திலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வெளியிட்டுள்ள அறிக்கையில், இப்போது பரவிவரும் இன்ஃப்ளூயன்சா வைரஸ் எச்1என்1 வகையைச் சேர்ந்தது தான், அதில் புதிதாக எந்த மரபணு மாற்றமும் ஏற்படவில்லை என்று உறுதி செய்துள்ள தகவலையும் ஐஎம்ஏ தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே பொதுமக்கள் பதற்றப்படாமல் தொற்று அறிகுறி இருந்தால் மருத்துவமனையை நாட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
எச்1என்1 வைரஸ் தொற்று என்பதால் மக்கள் தாங்களாகவே மருந்துகளை உட்கொள்ள வேண்டாம். மருந்துகங்களில் தாமாகவே இதுபோன்ற மருந்துகளை வாங்கி உட்கொண்டால் அவை உடலை பாதுகாக்கும் மைக்ரோபயோம்களை அழித்து, நுண்ணுயிர் எதிர்ப்பி எதிர்ப்பு நிலையை உருவாக்கிவிடும். அதேபோல், ஆண்ட்டி வைரல் மருந்துகளையும் தாமாக வாங்கி உட்கொள்ளக் கூடாது. நோயின் தீவிரத்தை மருத்துவர் பரிசோதித்து வழங்கும் மருந்துகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்று ஐஎம்ஏ வலியுறுத்தியுள்ளது.