மதுரை, செப்.5-
மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளதாக தவெகவினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
செப்டம்பர் 17ஆம் தேதி முதல்வர் விஜய் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைக்க விருதுநகர் செல்ல உள்ளார். அதே நாளில் மதுரை மீனாட்சியம்மன் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
17 ஆண்டுகளுக்கு பின் மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா செப்டம்பர் 17ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. மதுரை மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். வெளிநாடுகளில் இருந்தும் பலரும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான பணிகளை கோயில் நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதேபோல் குடமுழுக்கு விழாவுக்கான ஆய்வு பணிகளை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், எம்எல்ஏ முஸ்தப்பா, கோபிசன், கருப்பையா உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் சிடிஆர் நிர்மல்குமார் தரப்பில் 9 ஆயிரம் விஐபி பாஸ்கள் கோயில் நிர்வாகத்திடன் கேட்டு பெறப்பட்டுள்ளது.
தவெகவினர் தலையீட்டால் கோயில் நிர்வாகிகள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். இந்த நிலையில் மதுரை தவெகவினர் மத்தியில் ஒரு பேச்சு அடிபடுகிறது. அதாவது மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளதாக முனுமுனுக்கப்பட்டு வருகிறது. ஆனால் செப்டம்பர் 17ஆம் தேதி காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
இதற்காக முதல்வர் விஜய் விருதுநகர் மாவட்டத்தில் காமராஜர் படித்த பள்ளிக்கூடமான கேவிஎஸ் நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைக்க உள்ளார். காலை 7 மணியளவிலேயே விஜய் இந்த நிகழ்வில் பக்கேற்க வேண்டிய சூழல் உள்ளது. இதன்பின் விருதுநகரில் ரோடு ஷோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து மதுரை விமான நிலையம் வந்து விஜய் தனியார் விமானம் மூலமாக சென்னை திரும்புகிறார்.
ஆனால் தவெகவினர் தரப்பில் மதுரை விமான நிலையத்திற்கு மீண்டும் நேரடியாக வராமல், மீனாட்சியம்மன் குடமுழுக்கு விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்துவிட்டு சென்னை திரும்புவதாக சொல்லப்படுகிறது. ஆனால் தவெக எம்எல்ஏ-க்கள் யாரும் இதுவரை விஜய்யின் திட்டம் தொடர்பாக வாய் திறக்கவில்லை. வழக்கமாக விஜய் கோயிலுக்கு செல்வதாக இருந்தால், முந்தைய நாள் இரவில் தான் தகவல் வெளியிடப்படும்.
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்தபோது கூட அதிகாலையில் விஜய் வந்து சென்றார். அதேபோல் மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா என்பது லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் மிகப்பெரிய திருவிழாவாகும். அதில் விஜய் பங்கேற்றால் கூட்ட நெரிசல் ஏற்படக் கூடும் என்றும் பார்க்கப்படுகிறது.