சென்னை, செப். 17-
மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகள் மற்றும் மாநில சுயாட்சி உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து விரிவாக ஆராய்ந்து பரிந்துரைக்க, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் புதிய உயர்நிலைக் குழுவை அமைத்து முன்னாள் முதலமைச்சர் மு.க.
ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். கடந்த திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட இந்தக் குழுவில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே. அசோக் வர்தன் ஷெட்டி மற்றும் பொருளாதார நிபுணர்எம். நாகநாதன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்தின்படி, மாநிலங்களின் அதிகாரப் பரவலாக்கல், ஆளுநர்களின் செயல்பாடுகள், மொழிக் கொள்கை, தொகுதி சீரமைப்பு மற்றும் நிதிப் பகிர்வு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை இந்தக் குழு விரிவாக ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில் இது தொடர்பாகத் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்து ஆராய்வதற்காக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசால் அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழுவை முடக்கும் வேலைகளில் ஆளுங்கட்சி இறங்கி இருப்பது கண்டிக்கத்தக்கது.
பணியாளர்கள் பற்றாக்குறையால் இந்தக்குழு தொடர்ந்து செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், மாநில சுயாட்சி குறித்த குழுவின் 2ஆவது ஆய்வு அறிக்கையை தயார் செய்து வந்த ஆய்வாளர்களும் ஆராய்ச்சி மாணவர்களும் தொடர்ந்து செயல்பட முடியாத சூழலை இந்த டம்மி (Dummy) அரசு உருவாக்கி இருக்கிறது. மாநில உரிமைகள் குறித்து பேசுவதற்கும், போராடுவதற்கும் பயப்படும் த.வெ.க அரசு, அது குறித்து ஆய்வு செய்யவே பயந்து நடுங்கி ஆணையத்தை முடக்குவது வெட்கக்கேடானது. ரீல்ஸ் (Reels) போட்டால் மட்டும் மாநில சுயாட்சியை நிலைநாட்ட முடியாது என்பதை உணர்ந்து, ஒன்றிய- மாநில அரசுகளின் உறவு பற்றி ஆய்வு செய்யும் உயர்நிலைக்குழு, தொய்வின்றி செயல்படுவதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.