திருச்சி: “மாணவர்களின் போராட்டத்தை உண்மையாக மதிக்கிறோம். ஆனால் சிலர் போராட்டத்தை முதல்வருக்கு எதிராக திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். அதை அரசு எப்படிக் கையாள வேண்டுமோ அப்படிக் கையாளும்’’ என்று திருச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் கூறினார்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நீட் விவகாரத்தில் மாணவர்களின் போராட்டத்துக்கு நியாயமான ஆதரவைத் தருகிறோம் என்று ஏற்கெனவே முதல்வர் தனது நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டார். மாணவர்களின் போராட்டத்தை உண்மையாக மதிக்கிறோம். ஆனால் சிலர் போராட்டத்தை முதல்வருக்கு எதிராக திசை திருப்ப வேண்டும் என முயற்சிக்கிறார்கள். அதை அரசு எப்படிக் கையாள வேண்டுமோ அப்படிக் கையாளும். “பழநி கோயில் நில விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். ஆனால் அரசியல் நோக்கத்திற்காக என் மீது பழி போடுகிறார்கள். தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், “சமயபுரம் கோயிலில் மணியமாக பணியாற்றிய பழனிவேல் என்பவர் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதற்காக அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.