சென்னை, செப். 3-
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று (02-09-26) பால்வளம், மீன்வளம், கால்நடை பராமரிப்புத்துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
அதற்கு முன்னதாக அவை கூடியது கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் கோரிக்கைகளுக்கும் துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். அதனை தொடர்ந்து, கவன ஈர்ப்பு தீர்மானத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்தனர். அதன்படி எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, ‘ஆளுங்கட்சியின் தேர்தல் அறிக்கையில் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் இன்றோடு சேர்த்து 15 நாளாக போராடி வருகிறார்கள். இதற்கு நல்ல தீர்வு ஏற்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் சில நாட்களுக்கு கூறியிருந்தார். ஆனால் இதுவரைக்கும் எந்த சுமூகமான முடிவும் எட்டப்படவில்லை. இந்த துறைக்கு பொறுப்பு வகிக்கக்கூடிய முதலமைச்சரை தூய்மைப் பணியாளர்கள் நேரடியாக சந்தித்து கோரிக்கை வைக்க வேண்டும் என அவர்கள் தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள். எனவே, தூய்மை பணியா
ளர்களுடைய கோரிக்கைகளை முதலமைச்சர் எப்பொழுது நிறைவேற்றி கொடுப்பார்? தூய்மை பணியாளர்களை சந்தித்து முதலமைச்சர் பேசுவாரா?’ என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், ‘தூய்மைப் பணியாளர்களின் பல கோரிக்கைகள் நிறைவேற்றுவதற்கு ரெடியாக இருக்கிறது. ஆனால் அவர்கள் சொல்கிற பிரதான கோரிக்கைகளில் நிர்வாக சிக்கல் இல்லாமல் நிதி சார்ந்த சிக்கலும் இருக்கிறது. மிகப்பெரிய நிதி நெருக்கடியை சமாளித்து தான் அரவணைத்து கொண்டு செல்கிறோம். அதுமட்டுமல்லாமல் அங்கு பல சங்கங்கள் இருக்கிறது. எல்லோரையும் ஒன்றாக சேர்த்து வெகுவிரைவில் அதற்கான ஒரு தீர்வையோ ஒரு பேச்சு வார்த்தையை நாம் எடுக்க போகிறோம். ஆனால் கடந்த ஆட்சி காலத்தில் 150 நாட்களாக தொடர்ந்து போராடினார்கள். அதையும் நான் சுட்டிக் காட்டுகிறேன்’ என்று கூறினார்.
இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ‘பள்ளி கல்வித்துறை அமைச்சர் பேசும்போது 100 நாட்களை தாண்டி போராட்டம் நடந்தது என்று சொன்னார். அப்போது நீங்களும் 100 நாட்கள் தாண்டும் வரை காத்திருக்க போறீர்களா? அதேபோல எங்களுடைய ஆட்சியில் போராட்டம் நடந்தபோது அப்போதை அமைச்சர் சேகர் பாபு மேயர் பிரியா எல்லாம் தூய்மை பணியார்களை தொடர்ந்து சந்தித்து அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனால், இன்றைய ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட அந்த போராட்ட களத்திற்கு யாரும் சென்று அவர்களை இதுவரைக்கும் சந்திக்கவில்லை. ஆட்சியில் இல்லாதப்போது தூய்மை பணியாளர்களை சந்திக்க தயாராக இருந்த இன்றைய முதலமைச்சர், இப்போது தூய்மை பணியாளர்களை சந்திக்க மறுப்பது ஏன்?’ என மீண்டும் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், ‘அவர்களை இரண்டு முறை அறைக்கே அழைத்து வந்து விரிவாக பேசிக் கொண்டிருக்கிற அவர்களின் சகோதரன் தான் நான். என் நினைவு சரியாக இருக்குமானால் மேயர் அங்கு போனாரா? எனத் தெரியவில்லை. அவர்கள் போராடிய போது ரிப்பன் மாளிகை உள்ளேயே வரவிடவில்லை. நடைபாதையில் அமர்ந்து போராடினார்கள். ஆனால் இப்போது ரிப்பன் மாளிகை உள்ளே ஜனநாயகப்பூர்வமாக போராடுங்கள் என்று சொல்லிவிட்டோம். அதனால் இந்த விஷயத்தில் வெகு விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும்’ என்று கூறினார்.