சென்னை: திமுகவின் பரிந்துரைகள் சேர்க்கப்பட்டிருந்தால், நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க மாட்டோம் என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நீட்டிக்கப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடரின்போது அறிமுகம் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா, இண்டியா கூட்டணியால் தோற்கடிக்கப்பட்டது. இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆக.13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இண்டியா கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறிவிட்டதால், தற்போது 22 எம்.பி.க்கள் கொண்ட திமுக முடிவை நோக்கி பரவலாக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறும்போது, “நாங்கள் ஏற்கெனவே ஒருமுறை தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை முறியடித்துள்ளோம். மீண்டும் மசோதா தாக்கல் செய்யப்படும்போது அதன் உள்ளடக்கத்தை நாங்கள் பரிசீலிப்போம். அது தமிழகம் உள்பட தென் மாநிலங்களின் நலன்களுக்கு எதிராக இருந்தால், திமுக அதை எதிர்க்கும். மாறாக, மத்திய அரசு திமுகவின் பரிந்துரைகளை அதில் இணைத்திருந்தால், அதை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை. அதேநேரம், மாநில உரிமைகளுக்கான போராட்டத்தில் திமுக உறுதியாக இருக்கிறது” என்றார்.