சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயற்கு ழுகூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்தது.

அக்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசியதாவது; கட்சி வரலாற்றில் இது மிக முக்கியமான செயற்குழுவாக அமையவிருக்கிறது. உங்களின் ஒப்புதலுடன் கழகத்தின் அமைப்பு முறையில் முக்கியமான பெரிய மாறுதல்களைச் செய்யவிருக்கிறோம். திமுக துவங்கப்பட்டு 75 ஆண்டுகள் கடந்த பிறகும், கழகம் வலிமையோட இருப்பதற்கான காரணம், நம் அமைப்புமுறை தான்.

கலைஞர் கூறிய வரிகளை நீங்க மறந்திருக்க மாட்டீர்கள். 'இந்த கருணாநிதியின் வாழ்வு முடிந்தாலும், திமுகவின் வாழ்வு முடியாது! அதனை, அதன் அமைப்புமுறை காப்பாற்றும்!”. இதுதான் அவர் குறிப்பிட்டது. அப்படிப்பட்ட அந்த அமைப்பு முறையின் வலிமையாலதான், நாம் நிற்கிறோம். நாம் தோல்வியடைய பல காரணங்கள் இருப்பினும் நிர்வாகிகளின் செயல்பாடுகளும் ஒன்று.தோல்விக்கு பிறகு, எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு தொகுதியாக பார்த்து குறைகளைக் கண்டறிந்து ஆளை மாற்றுவதைவிட முழுமையான ஒரு சுய பரிசோதனை வேண்டும் என முடிவெடுத்தேன். அந்த வகையில் கட்சியின் நிர்வாக அமைப்பில் பல மாறுதல்களைச் செய்யவிருக்கிறோம். கடுமையானதாகத்தான் இருக்கும்; சிலருக்கு கசப்பானதாகவும் இருக்கும். கசப்புதான் உடலுக்கு நன்மை செய்யும். அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.இந்த மாறுதல்கள் அடுத்த நூறாண்டுக்கு கட்சி உயிர்ப்போடு இருப்பதை உறுதி செய்யும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

இதற்கிடையே அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: அடுத்த நூறு ஆண்டுகளுக்குக் கழகத்தின் பயணம் தொடர்வதற்கான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது செயற்குழு. போர் அடிக்கிறது என அரசியலுக்கு வந்தவர்களல்ல நாம்; போராட வந்தவர்கள். Comeback கொடுப்பதில் Specialist-ஆன நாம், திரும்ப வருவோம்; வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்போம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.