சென்னை: 2006ல் அதிமுகவுடனும், 2017ல் திமுகவுடனும் கூட்டணி வைத்து இரண்டு பெருந்தவறுகளை செய்துவிட்டேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை: தமிழக சட்டசபை தேர்தலில் 4 தொகுதிகளைக் கொடுத்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்ப்பந்தித்தது. 2006ல் அதிமுகவுடனும், 2017ல் திமுகவுடனும் கூட்டணி வைத்து இரண்டு பெருந்தவறுகளை செய்துவிட்டேன்; கூட்டணியில் இருந்தபோது அரசையோ, திமுகவையோ விமர்சித்திருந்தால், கூட்டணியிலிருந்து விலக்கியிருப்பார்கள். 2017ல் பாஜவை எதிர்ப்பதற்காக திமுகவுடன் உடன்பாடு கொண்டது இரண்டாவது பெரும் பிழையாகும். பொதிகைமலை உறுதியாக இருப்பதைப் போல நானும், நமது இயக்கமும் சரியான முடிவுகளை இன்றைய அரசியலில் நாம் மேற்கொண்டு இருக்கிறோம். இனி நமக்கு எந்தவித கேடும் யாரும் செய்ய முடியாது.வைரம் பாய்ந்த வஜ்ரம் போன்ற கண்மணிகளே நீங்கள் இலட்சோப லட்சம் பேர் இருக்கிறீர்கள். கிரேக்க புராணத்தில் பீனிக்ஸ் பறவை என்று குறிப்பிடப்பட்டது கற்பனைதான். நடைமுறையில் சரிவிலிருந்து மீண்டு, ஓங்கி உயர்ந்து தலைநிமிர்ந்து தமிழக அரசியலில் நம் இயக்கம் பயணிக்கிறது. இனி நமக்குத் தோல்வி இல்லை. வெற்றித் தேவதை நமக்கு ஆரம் சூட்ட காத்திருக்கிற நிலையை எண்ணி நாம் தடைகளைத் தகர்த்து, நம்மை வீழ்த்த நினைப்போரின் கணைகளை முறித்து செம்மாந்து நடப்போம். ஒளிமயமான எதிர்காலம் நம்மை வரவேற்க காத்திருக்கிறது. உங்களுக்கு தெளிவு ஏற்பட வேண்டும் என்பதற்காக இந்த விளக்கம் அல்ல, நடுநிலையாளர்களும், பொதுவாழ்வில் இருப்போரும், பொதுமக்களும், ஊடகத்தில் இருப்போரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே மடலாக சங்கொலியின் வாயிலாக உங்களுக்குத் தெரிவிக்கிறேன். நிறைந்த நம்பிக்கையோடு பயணத்தைத் தொடர்வோம். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.