மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் நேற்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தடுத்திடவும், இலங்கைக் காவலில் உள்ள தமிழகத்தை சேர்ந்த அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், இரண்டு மீன்பிடிப் படகுகளில் வழக்கமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மற்றொரு சம்பவத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் மீண்டும், மீண்டும் இதுபோன்று கைது செய்யப்படுவதும், அவர்களின் மீன்பிடிப் படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படுவதும் தடையின்றித் தொடர்வது மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது.

தற்போது தமிழகத்தை சேர்ந்த மொத்தம் 254 மீன்பிடிப் படகுகளும், தற்போதைய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட 90 மீனவர்களும் இலங்கை காவலில் உள்ளனர். தொடர்ச்சியாக நிகழும் இத்தகைய கைது நடவடிக்கைகள் தமிழகத்தின் கடலோர மீனவ சமூகத்தினருக்குக் கடுமையான இன்னல்களை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கையில் நீண்ட காலம் தடுப்புக் காவலில் வைக்கப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், அவர்களது குடும்பத்தினருக்கு கடுமையான பொருளாதார நெருக்கடியினையும் தொடர்ச்சியான மன உளைச்சலையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சம்பவங்கள், கடலோரப் பகுதிகளின் சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை ஆழமாகச் சீர்குலைத்துள்ளது.

எனவே, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அரசு உடனடியாக விடுவித்திடவும், இதுபோன்ற கைது நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவதைத் தடுக்கவும். மத்திய அரசு உரிய தூதரக நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.