தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறப்பது குறித்து 3 வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நவோதயா பள்ளிகளை, ஒவ்வொரு மாவட்டங்களிலும் துவக்க, அந்தந்த மாநில அரசுகள், நிலம் ஒதுக்கினால் போதும். மத்திய அரசே, கட்டமைப்புகளுக்கான செலவுகளை ஏற்கிறது. எனினும், தமிழகத்தில், நவோதயா வித்யாலயா பள்ளிகள் துவங்க, மாநில அரசு, தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளிகளை நிறுவ வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்று (ஜூலை 16) சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்கப்படும் விவகாரத்தில் 12 வார கால அவகாசம் தமிழக அரசு கோரியது. இந்த கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம்கோர்ட் 3 வார காலத்திற்குள் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. அப்போது நீதிபதி நாகரத்னா நவோதயா பள்ளிகளை தமிழகம் மட்டும் புறக்கணிப்பது ஏன்? கேள்வி எழுப்பினார். மேலும் அவர் கூறியதாவது: மத்திய அரசு 9ம் வகுப்பில் மூன்றாவது மொழியை அறிமுகப்படுத்த வேண்டாம். சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மற்றும் மாநிலப் பாடத்திட்டம் என அனைத்திலும் 10ம் வகுப்பு என்பது ஒரு பொதுத் தேர்வு ஆண்டாகும். 8ம் வகுப்பு முடிந்தவுடனேயே அதற்கான அழுத்தம் தொடங்கிவிடுகிறது.
9ம் வகுப்பில் ஒரு புதிய மொழியை கற்பிக்க துவங்காமல், அதற்குப் பதிலாக 6ம் வகுப்பிலேயே அதைத் தொடங்கலாம், ஆனால் 9ம் வகுப்பில் மூன்றாவது மொழி கற்பிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதி தெரிவித்தார். இந்த விவகாரத்தில் வரும் ஆகஸ்ட் 11ம் தேதிக்குள் அரசிடமிருந்து உரிய விளக்கத்தை அளிக்க நீதிபதி நாகரத்னா தலைமையிலான அமர்வு அதிரடி உத்தரவிட்டது.