'ஜுராசிக் பார்க்' திரைப்படத்தின் புகழ்பெற்ற கதாபாத்திரம் டாக்டர் ஆலன் கிராண்ட் ஆக நடித்து உலகம் முழுவதும் ரசிகர்களைக் கவர்ந்த மூத்த நடிகர் சாம் நீல் (78), சிட்னியில் காலமானார்.


நியூசிலாந்தின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான சாம் நீல், கடந்த ஏப்ரல் மாதம் தான் பாதிக்கப்பட்டிருந்த அரிய வகை இரத்தப் புற்றுநோயில் இருந்து முழுமையாக மீண்டுவிட்டதாக அறிவித்திருந்தார். புற்றுநோயிலிருந்து மீண்டு நலமுடன் இருந்த நிலையில், திடீரென அவரது மறைவு நிகழ்ந்திருப்பது திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கான காரணத்தை குடும்பத்தினர் இன்னும் வெளியிடவில்லை. கலைத் திரைப்படங்கள் முதல் பிரம்மாண்டமான ஹாலிவுட் பிளாக்பஸ்டர் படங்கள் வரை அனைத்திலும் தனது முத்திரையைப் பதித்தவர். 'தி பியானோ' , 'தி ஹன்ட் ஃபார் ரெட் அக்டோபர்', 'ஓமன் 3' மற்றும் புகழ்பெற்ற 'பீக்கி பிளைண்டர்ஸ்' தொடர் என 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருடைய மறைவுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தனது இரங்கல் செய்தியில், "50 ஆண்டுகளுக்கும் மேலாக நியூசிலாந்தின் கதைகளை உலகுக்குக் கொண்டு சென்றவர்களில் சாம் நீல் மிக முக்கியமானவர். அவரது ஒவ்வொரு நடிப்பும் கண்ணியத்துடனும், நகைச்சுவை உணர்வுடனும் இருக்கும். அவர் திரையுலகின் மாமேதை" என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.