தமிழக முதல்வர் விஜய்யின் கடைசி படம் ‘ஜன நாயகன்’ பல தடைகளை தாண்டி இன்று வெளியானது. முதல் நாள் முதல் காட்சிக்காக ரசிகர்களுடன் அமைச்சர்களும் திரையரங்குகளுக்கு சென்றனர். மதுவிலக்கு அமைச்சர் விக்னேஷ் விடுப்பு எடுத்து படம் பார்த்தது சர்ச்சை ஆனது. அமைச்சர் முகமது பர்வேஸ், இனி தளபதி படத்தை பார்க்க முடியாது என உருக்கமாக அழுத காட்சி இணையத்தில் வைரலாகிறது.

தமிழக முதல்வர் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் இன்று ரிலீஸாகி உள்ளது. பல மாதங்களுக்குப் பிறகு, பல்வேறு தடைகளத் தாண்டி ஜனநாயகன் ரிலீஸானது. முதல்வர் விஜய்யின் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகிறார்கள். முதல் நாள் முதல் காட்சியைக் காண ரசிகர்கள் மட்டுமல்ல, அமைச்சர்களும் திரையரங்குகளை நோக்கி படையெடுத்தனர். இதன்படி மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ், அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், அமைச்சர் பர்வேஸ் மற்றும் அமைச்சர் அருண்ராஜ் ஆகியோர் முதல் காட்சியைப் பார்த்து ரசித்தனர். அமைச்சர் விக்னேஷ், தான் எப்போதும் படம் பார்க்கும் திரையரங்கில் ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்தார். அமைச்சர் வருகையால் திரையரங்கிற்கு வெளியே துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் ஜனநாயகன் திரைப்படத்தை திரையில் கண்டு, இனி எப்போது தளபதி படத்தை பார்ப்பேன். இனி அது முடியாதல்லவா எனக் கூறி கண்ணீர் விட்டு அழுதார். அமைச்சர் அழுத காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் ஆகியோர் இருவரும் இணைந்து, சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் ஜனநாயகன் படத்தை கண்டுகளித்தனர்.