சென்னை ராஜாஜி சாலையில் உள்ள தலைமைச் செயலக வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு மனு அளிக்க வரும் பொதுமக்களிடம் தீவிர சோதனைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். தலைமைச் செயலக வளாகத்தில் பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தைத் தொடர்ந்து இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஜூலை 15-ம்தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஞ்சலை அம்மாள் என்ற 45 வயது பெண்மணி தலைமைச் செயலகத்தின் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிக்க வந்தார். மனு அளித்து விட்டு வெளியே வந்த அவர், திடீரென தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், உடனடியாக அவரை தடுத்து நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தலைமைச் செயலகத்தின் நுழைவாயிலில் போலீசார் மற்றும் முதல்வர் பாதுகாப்பு பிரிவினர் தனித்தனியாக சோதனை நடத்தும் நிலையில், முதல்வர் தனிப்பிரிவு வரை அந்த பெண்மணி மண்ணெண்ணெயை கொண்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விசாரணையில் அந்த பெண்மணி கொண்டு வந்த பாட்டிலில், தண்ணீருடன் மண்ணெண்ணெய் கலந்து இருந்ததால், அது குடிநீர் பாட்டில் போலவே தோன்றியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த பாதுகாப்பு குறைபாட்டைத் தொடர்ந்து, தற்போது முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிக்க வளாகத்திற்குள் நுழையும் பொதுமக்களிடம் சோதனைகள் பலமடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு கொடுக்கவரும் பொதுமக்கள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.