சவுதி கடல்பகுதியில் ஈரான் கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மேலும் தமிழ்நாடு மீனவர் உயிரிழந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், கொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த மாவீரன், அவருடன் பயணித்த கீழ மோகரை கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் உட்பட 4 பேர் மீன்பிடி தொழிலுக்காகச் சவுதி அரேபியா சென்றுள்ளனர். கடந்த 10-ஆம் தேதி அதிகாலை மீன்பிடிப்பதற்காகக் கடலுக்குச் சென்றபோது, அவர்கள் ஈரானிய கடற்கொள்ளையர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இத்தாக்குதலில் மாவீரன் என்ற மீனவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயம் அடைந்த மற்ற 3 மீனவர்களும் சிகிச்சைக்காகச் சவுதி அரேபியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், கீழமோகரை கரையை சேர்ந்த சங்கர் என்ற மீனவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மீனவக் கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், உயிரிழந்து கடந்த 10 நாட்களாகியும் மாவீரனின் உடல் இன்னும் இந்தியாவிற்குக் கொண்டு வரப்படாமல் உள்ளதால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியிருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு மீனவர் உயிரிழந்திருப்பது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.