டில்லியில் உண்ணாவிரதம் இருந்து வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தேர்வு முறைகேடுகள் தொடர்பாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி காக்ரோச் ஜனதா கட்சி என்ற அமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. இப்பிரச்னையை முன்வைத்து, ஜூன் 20 முதல் டில்லி, ஜந்தர்மந்திரில் போராட்டம் நடந்து வருகிறது. இதில், கல்வியாளரும், பருவநிலை ஆர்வலருமான சோனம் வாங்சுக், ஜூன் 28 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு உள்ளார். அவருடன் மூன்று மாணவர்களும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். கோரிக்கையை வலியுறுத்தி மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் ஜூலை 20ல் பார்லிமென்டை நோக்கி அமைதிப் பேரணி நடத்தவும் போராட்டக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.போராட்டம் இன்றுடன் 20வது நாளை எட்டிய நிலையில், ஆதரவாளர்களிடம் பேசிய வாங்சுக், தனது உடல்நிலை பலவீனமடைந்து இருந்தாலும், உறுதி தளரவில்லை என்று கூறினார். 'ஜூலை 20ல் பார்லிமென்ட் நோக்கி பேரணியை நடத்தவுள்ளோம். எந்த விலைகொடுத்தாவது ஜூலை 20 வரை நான் உயிரோடு இருப்பேன்' என்று கூறினார். போராட்டக்காரர்கள் மற்றும் வாங்சுக் ஆகியோரை பல்வேறு கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று (ஜூலை 18) சோனம் வாங்சுக் உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் எடை குறைந்து உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.