கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் துவார பாலகர்கள் சிலைகளில் பொருத்தப்பட்டிருந்த தங்கக் கவசம், நிலைக்கதவில் பதிக்கப்பட்டிருந்த தங்கத்தகடு ஆகியவை கடந்த 2019-ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் செப்பனிடப்பட்டது. அப்போது 4.54 கிலோ தங்கம் குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது.
இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து கேரள ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர்கள் பத்மகுமார், வாசு, நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், உன்னிகிருஷ்ணன், தேவசம் போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமார் உட்பட 10 பேரை எஸ்.ஐ.டி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சபரிமலை ஐயப்பன் கோவில் மூத்த தந்திரி கண்டரரு ராஜீவருவை சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தது. தங்கம் கடத்தலுக்கு தந்திரியும் உதவியாக இருந்ததும் அம்பலமானது.
இந்நிலையில், சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் நேற்று கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள 21 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு முழுவதும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்து வருகிறது. சென்னையில் உள்ள ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிகிறது.